அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைப்பு... நள்ளிரவு வரை விசாரணை... நவ.6 வரை நீதிமன்றக் காவல்!

 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கச் சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று அமைந்தகரையில் கைது செய்யப்பட்டு, காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்குப் பின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடித்து, நள்ளிரவில் ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்யமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

லஞ்ச ஊழல் வழக்கில் பல முக்கியப் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்பக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி ஜாமீன் கோரி நள்ளிரவு 12:30 மணி வரை தீவிர வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷை வரும் நவம்பர் 6-ம் தேதி வரை (10 நாட்கள்) நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டுப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.