அன்பில் மகேஸ் சகோதரி மகள் திருமணம்... நாளை தஞ்சை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். இதையொட்டிப் பாதுகாப்புப் பணிகளுக்காகத் தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அமைச்சர் அன்பில் மகேஸின் சகோதரி மகள் திருமணத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். அதன் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் செல்லும் முதல்வர், அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மற்றும் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ச. ராமநாதன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, முதல்வர் கார் மூலம் திருச்சி வழியாகச் சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார். முதல்வர் வருகையையொட்டித் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தஞ்சாவூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது இதர ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்கவிடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் விழா நடைபெறும் இடங்கள் மற்றும் முதல்வர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.