"3 தமிழர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும்" - அன்புமணி கோரிக்கை!

 

கர்நாடக காவிரி வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய காட்டில் மான் வேட்டையாடியதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்களைக் கர்நாடக வனத்துறை கொடூரமாகச் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட மூவரும் எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடாத நிலையில், தங்களின் கொடூரச் செயலை மறைப்பதற்காக அவர்கள் மான் வேட்டையாட வந்ததாக வனத்துறையினர் பொய்க் கதையைக் கூறி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்தில் வாழ்வாதாரம் தேடி சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதிக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களே உயிரிழந்த மூவரும் ஆவார். இச்சம்பவம் தொடர்பாகப் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அறிவித்துள்ள மாஜிஸ்திரேட் விசாரணையில் உண்மை வெளிவராது என்பதால், இக்கொலை வழக்கைச் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும்.

மான் வேட்டையாடியதற்கோ அல்லது இருதரப்புத் துப்பாக்கிச் சூட்டிற்கோ எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இப்படுகொலையைக் கண்டித்துப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.