“மதிக்காத கர்நாடக அரசிடம் பேசுவதில் எந்தப் பயனுமில்லை” - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

 

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசுடன், தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதால் எவ்விதப் பயனும் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "கடந்த 20 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் இரண்டு முறை வலியுறுத்தியும், கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட மறுத்துவிட்டது. கடந்த ஜூன் மாதம் 9.1 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதிலாக 2.1 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 3.2 டி.எம்.சி.க்கு பதிலாக 0.4 டி.எம்.சி. தண்ணீரும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது".

"காவிரி நீர் வராததால் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடி முடிந்துவிட்ட நிலையில், மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாததால் வரவிருக்கும் சம்பா சாகுபடியின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது."

"கர்நாடக அணைகளில் 60 டி.எம்.சி-க்கும் அதிகமான நீர் கையிருப்பில் உள்ளது. நல்லெண்ண அடிப்படையில் 10 டி.எம்.சி. தண்ணீரைக் கூடத் திறக்க மனமில்லாத, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடக அரசிடம் சென்று பேசுவதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் தந்திரமான அழைப்பில் தமிழக முதலமைச்சர் விழக் கூடாது".

"இது ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சியின் பிரச்சினை அல்ல; ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து, பிரதமரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.