எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து விசாரணை வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
சென்னையை அடுத்த எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எண்ணூர் அருகே கடலில் கலக்கும் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். ஆற்றில் மீன்கள் அழுகுவதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற கிராமங்களில் தொற்றுநோய்கள் பரவும் தீவிர அபாயமும் உருவாகியுள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் அனல் மின்நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுழற்சி முறையின்றி சுத்திகரிக்கப்படாத வேதிக்கழிவுகள் ஆற்றில் கலக்கவிடப்பட்டதே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொசஸ்தலை ஆற்றில் இதுபோன்று மீன்கள் இறந்து மிதப்பது ஏற்கனவே பலமுறை நடந்துள்ளதாகவும், அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் மீண்டும் இந்நிலை தொடர்வதாகவும் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கொசஸ்தலை ஆற்று மீன்பிடிப்பையே நம்பியுள்ள உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அடுத்த சில வாரங்களுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மீன்கள் இறந்தது குறித்து உடனடியாகச் சிறப்பு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். காரணமான தொழிற்சாலைகளிடம் அபராதம் வசூலித்துப் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆற்றில் மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்றிச் சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்.