தென்காசி இலஞ்சியில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள குருவிமேடு பகுதியில், புகழ்பெற்ற இலஞ்சி முருகன் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்லியல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சியைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை என்பவரது தோட்டத்தில், சிற்பங்களுடன் கூடிய ஒரு கல் மண்ணில் பாதி புதைந்து கிடப்பது குறித்துத் தென்பொதிகை ஆவணக் காப்பகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதருக்குள் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு 70x45 செ.மீ. அளவுகளுடன் கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 12 வரிகளுடன் கூடிய முற்றுப்பெறாத கல்வெட்டும், அதன் அடியில் வேல் மற்றும் பாம்பைக் கவ்விய மயில் புடைப்புச் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களின் அடிப்படையில் இது 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை (செப்டம்பர் 4, 1801) சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு இலஞ்சி முருகன் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், இதுகுறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.