கடலுக்கடியில் விரிந்த மூவர்ணக்கொடி... அந்தமானில் கின்னஸ் உலக சாதனை!
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரை பகுதியில், கடலுக்கடியில் இந்திய தேசியக் கொடியை விரித்து புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார் 60 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான மூவர்ணக்கொடியை நீர்மூழ்கி வீரர்கள் கடலின் ஆழத்தில் விரித்துக் காட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பல்வேறு அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் முறையான திட்டமிடலுடன் இந்த பிரம்மாண்ட முயற்சி வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.
சுவராஜ் தீவு பகுதியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை அந்தமான் துணை நிலை ஆளுநர் டி. கே. ஜோஷி, தலைமைச் செயலாளர் சந்திர பூஷண் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுப் பாராட்டினர். இந்திய கடற்படை, கடலோர காவல்படை, வனத்துறை மற்றும் உள்ளூர் டைவிங் மையங்களைச் சேர்ந்த வீரர்களின் விடாமுயற்சியால் இந்தச் சாதனை சாத்தியமானது. இன்று காலை 10.35 மணியளவில் கின்னஸ் அமைப்பின் நடுவர் ரிஷி நாத், இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து சான்றிதழை வழங்கினார்.
தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த இந்த கின்னஸ் சாதனையைத் தொடர்ந்து, அந்தமானில் அடுத்த சாதனையாக நாளை 'மிக உயரமான மனித கோபுரம்' அமைக்கும் முயற்சி நடைபெற உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும், தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகவும் நடத்தப்படும் இத்தகைய நிகழ்வுகள் அந்தமான் தீவுகளுக்குப் பெருமை சேர்த்துள்ளன. கடலுக்கு அடியில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட செய்தி இப்போது நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.