பள்ளி விடுதியில் நள்ளிரவில் 10 மாணவிகளின் தலைமுடியை வெட்டிய மர்ம நபர்கள்... பெற்றோர்கள் ஆவேசம்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருகுலப் பள்ளி விடுதியில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 10 மாணவிகளின் தலைமுடி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்குள் மர்ம நபர்கள் நுழைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல்நாடு மாவட்டம், சத்தெனப்பள்ளி ஊரக மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் குருகுலப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விடுதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இரவு மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் 10 பேரின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மறுநாள் காலையில் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர், விடுதி பாதுகாப்பு குறித்து நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் தங்கியிருந்த இடத்துக்குள் மர்ம நபர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மாணவிகளின் தலைமுடியை வெட்டியது யார், எதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.