பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் ஆன்மீகப் பெருவிழாவான 'கோதாவரி புஷ்கர' விழாவை முன்னிட்டு, நதிநீரின் தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டு அம்மாநிலத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுற்றுச்சூழல் சார்ந்த மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
புஷ்கர விழாவின் போது ஆந்திரா மட்டுமன்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானப் பக்தர்கள் கோதாவரி நதியில் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த விழா நடைபெறும் பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புஷ்கர விழா காலங்களில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கலந்து நதிநீர் மாசுபடுவதைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். நதிக்குச் செய்யப்படும் வழிபாடுகள் மற்றும் சடங்குகளின் போது இயற்கை சீர்கேடு அடைவதைத் தவிர்க்கப் பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புண்ணிய நதியான கோதாவரி மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, சடங்குகள் மற்றும் வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எளிதில் மட்கும் தன்மை கொண்ட இயற்கை பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள், தட்டுகளுக்கு மாற்றாகப் பாக்கு மட்டைத் தட்டுகள், இலைகள் மற்றும் சணல் பைகளைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆன்மிக விழாவை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், நதிக்கரையின் தூய்மையையும் இயற்கையையும் காக்கத் துணை முதல்வர் பவன் கல்யாண் மேற்கொண்டுள்ள இந்தத் தூய்மை உத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.