ரூ.20000  பணம் கேட்டு தகராறு! பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய கறிக்கடைக்காரர்

 

 

ஆந்திரப் பிரதேசத்தில் பணம் மற்றும் குழந்தை தொடர்பான விவகாரத்தில் பெண்ணை கொலை செய்ததாக கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி, மங்களகிரி பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கும் கவுஸ் முகைதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆண் குழந்தையை பவானிப்புரத்தைச் சேர்ந்த ஷபி என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக வளர்த்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஷபிக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆண் வாரிசு இல்லாததால் அந்த குழந்தையை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்யாணிக்கும் ஷபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், கல்யாணி அவ்வப்போது ஷபியிடம் பணம் கேட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று ரூ.20 ஆயிரம் பணம் வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், பணம் கொடுக்காவிட்டால் தான் வளர்த்து வரும் ஆண் குழந்தையை அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ஷபி, கல்யாணியை கறிக்கடைக்கு வரவழைத்து அங்கு அவரை கொலை செய்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கொலைக்கு கறிக்கடையில் பணியாற்றும் குரவையா என்பவர் உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.கொலைக்குப் பின்னர் உடலை துண்டுகளாக்கி அருகிலுள்ள கால்வாயில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் உடல் பாகங்கள் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இப்ராகிம்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதும் ஆரம்பத்தில் முக்கிய தடயங்கள் கிடைக்கவில்லை.பின்னர் அடையாளம் காண உதவும் வகையில் உயிரிழந்த பெண்ணின் உடையில் இருந்த தகவல்கள் மற்றும் கையில் இருந்த டாட்டூ தொடர்பான விவரங்களை போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த கல்யாணியின் சகோதரர், உயிரிழந்தது தனது சகோதரி என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஷபி மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய மற்றவர்களின் பங்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.