இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் இன்று பதவியேற்பு!

 

இங்கிலாந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நாட்டின் 59-வது பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்த ஆண்டி பர்ன்ஹாம் புதிய அரசை அமைப்பதற்கான அழைப்பைப் பெற்றுப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

கடந்த 2024 பொதுத்தேர்தலில் பெரும் வெற்றியுடன் ஆட்சியமைத்த தொழிலாளர் கட்சியின் பிரதமர் கீர் ஸ்டார்மர், இரண்டாண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த நிலையில் பதவி விலகியுள்ளார். நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலை, பணவீக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய நியமனங்கள் காரணமாகக் கட்சிக்குள்ளேயே ஸ்டார்மருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வி மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மான்செஸ்டர் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பியது போன்றவை ஸ்டார்மருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. இதன் காரணமாகத் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஸ்டார்மர், பிரதமர் இல்லமான '10 டவுனிங் ஸ்டிரீட்' வாசலில் தனது இறுதி உரையையாற்றிவிட்டு மன்னரிடம் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

தொழிலாளர் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம், பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். மான்செஸ்டர் நகரின் மேயராகச் சிறப்பாகச் செயல்பட்டு மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்ற இவர், பிரிட்டன் அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

அதிகாரங்களைப் பரவலாக்குவது, பொதுப் போக்குவரத்து அமைப்புகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வில் இருந்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது ஆகியவை தனது அரசின் முதன்மை இலக்குகள் எனப் பொறுப்பேற்றவுடன் அவர் உரையாற்றினார். கடந்த பத்தாண்டுகளில் இங்கிலாந்தின் 7-வது பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.