மார்க் குறைந்ததால் ஆத்திரம்... ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளிட்ட கல்லூரி மாணவன்!
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காகத் தன்னை கண்டித்த இயற்பியல் பாட ஆசிரியையின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோக்களாக மாற்றி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுத் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனைத் தெலுங்கானா மாநிலப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டக் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிலாபாத் நகரில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரி ஒன்றில், முதலாம் ஆண்டு (இண்டர்மீடியட்) படித்து வந்த மாணவன் ஒருவன், சமீபத்தில் நடைபெற்ற தேர்வுகளில் மிகவும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளான். இதனால், அவனுக்கு பிசிக்ஸ் பாடம் கற்பிக்கும் ஆசிரியை, படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளார்.
ஆசிரியையின் இந்த கண்டிப்பால் ஆத்திரமடைந்த மாணவன், அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளான். இதற்காக இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ஒரு போலி முகவரியை உருவாக்கியுள்ளான். கடந்த நவம்பர் மாதம் முதல், ஆசிரியையின் சாதாரணப் புகைப்படங்களை நவீன ஏ.ஐ. தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆபாச வீடியோவாக மாற்றி, அந்தப் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளான்.
இந்த ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அந்த மாணவன் கடுமையான மன உளைச்சலையும் தொல்லையையும் கொடுத்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் இந்தத் தொல்லைகளைத் தாங்க முடியாத ஆசிரியை, இது குறித்து அதிலாபாத் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆசிரியையின் புகாரைத் தொடர்ந்து, காவல் துறையினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களை ஆபாசமாகக் காட்டுதல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இது குறித்து அதிலாபாத் முதலாவது நகரக் காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) பி. சுனில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்ட ஆசிரியை நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சைபர் கிரைம் பிரிவு போலீசாரின் உதவியுடன் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கியது அதே கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவன் என்பது உறுதி செய்யப்பட்டு, அவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது."
நவீன ஏ.ஐ. தொழில்நுட்பங்களை இளைஞர்களும் மாணவர்களும் தவறான வழிகளில் பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தினால், அவர்கள் மீது கடுமையான ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் ஆயுட்காலச் சிறைத்தண்டனை வரை கிடைக்கக்கூடிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.