அனில் அம்பானி மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றம்  அதிரடி உத்தரவு!

 

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிக்க பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்தன. இதனை எதிர்த்து அனில் அம்பானி தொடர்ந்த வழக்கில், வங்கிகள் நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்திருந்தார். ஆனால் இந்தத் தடையை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்ததை அடுத்து, அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி தாக்கல் செய்த 3 மேல்முறையீட்டு மனுக்களையும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் முடிவில், அனில் அம்பானியின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவரின் 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த அதிரடி தீர்ப்பு அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மனுக்களைத் தள்ளுபடி செய்தாலும், அனில் அம்பானி தனது தரப்பு நியாயங்களை மும்பை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியிடம் மீண்டும் முறையிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை விரைந்து விசாரித்து முடிக்குமாறு தனி நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வங்கிகளின் நடவடிக்கைக்குத் தடை கோரும் அனில் அம்பானியின் முயற்சி தற்போது மீண்டும் உயர் நீதிமன்றத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது.