நவம்பரில் அரங்கேறும் மாஸ் வெடிங் - 'ஜெயிலர் 2' ரிலீஸுக்குப் பின் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!

 

தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவரின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த பரபரப்பான தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அனிருத் மற்றும் காவ்யா மாறன் இருவருக்குள்ளும் நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்ததாகத் திரைத்துறையில் முணுமுணுக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் அனிருத்தின் நெருங்கிய உறவினரும் மூத்த நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் இவர்களது காதலுக்கு இரு வீட்டின் பெற்றோர்களும் முழுச் சம்மதம் தெரிவித்துவிட்டதாக ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு அனிருத் தொடர்ந்து இசையமைத்து வந்த சூழலில் உருவான இந்தத் நட்பு, தற்பொழுது திருமண பந்தத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த நிலையில், இவர்களது பிரம்மாண்ட திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்த பிரத்யேகத் தகவலைப் பிரபல சினிமா பத்திரிகையாளர் 'வலைப்பேச்சு' அந்தணன் வெளியிட்டுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் இசைப் பணிகள் மற்றும் ரிலீஸ் வேலைகளில் அனிருத் உச்சக்கட்ட பிஸியாக உள்ளார்.

எனவே, 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு, எந்தவிதமான பணி நெருக்கடிகளும்  இல்லாமல் நிம்மதியாகத் திருமணத்தை நடத்த இரு குடும்பத்தாரும் ஒருமனதாகத் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் தற்பொழுது இரு வீட்டாரும் ரகசியமாகத் தேதிகளைக் குறித்து வருவதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் டாப் இசையமைப்பாளரும், நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் வீட்டு மகளும் கரம் கோர்க்க உள்ள இந்தத் திருமண செய்தி, சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு குடும்பத்தாரும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.