அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் கைதாக வாய்ப்பு?! ரூ.50 கோடி குதிரைப்பேர புகாரால் தவெக - திமுக இடையே உச்சகட்ட பதற்றம்!

 

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், தற்பொழுது தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற புதிய குதிரைப்பேர புகாரில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மற்றும் தவெக எம்எல்ஏக்கள் சிலர் தங்களை திமுகவிற்கு இழுக்கச் சதி நடப்பதாக அடுத்தடுத்து ஆதாரங்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் தற்போது அடிபட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் 4 பேர் தவெக எம்எல்ஏவை நேரிலும் மொபைல் மூலமும் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். தவெக ஆட்சியை வீழ்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாக அவர்கள் ஆசை காட்டியுள்ளனர்.

இந்த பேரத்திற்கு உடன்பட மறுத்ததால், "எங்களது பேச்சை கேட்கவில்லை என்றால் உன்னை இந்த அரசியலில் இருந்தே முற்றிலும் அழித்துவிடுவோம்" என அவர்கள் தமக்குக் கடுமையான கொலை மிரட்டல் விடுத்ததாகத் தவெக எம்எல்ஏ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஐந்து மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

தற்போது தவெக எம்எல்ஏவிடம் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் நேரடியாகப் பேரம் பேசி, மிரட்டல் விடுத்துள்ள விவகாரத்தில் பின்னணியில் அனிதா ராதாகிருஷ்ணன் செயல்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். குதிரைப்பேர வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், முறையான ஆடியோ மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் மற்றொரு புதிய வழக்குப் பதிவு செய்து, அவரை மீண்டும் கைது செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.