அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு... 6 மணி நேர போலிஸ் விசாரணைக்குப் பின் நள்ளிரவில் நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நேற்று காலை கைது செய்யப்பட்ட திமுகவின் மூத்த தலைவரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நள்ளிரவில் நீதிமன்ற நடுவர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க அண்மையில் மறுப்புத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை தூத்துக்குடி தனிப்படை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். கைதைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குத் தனிப்படை மற்றும் உளவுத்துறை போலீசார் அவரிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பித் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு, முறைப்படி அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் போதே, "தவெக ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது" என்று அவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் நள்ளிரவு வரை நீண்டதால், நேற்று நள்ளிரவே தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் இல்லத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது திமுக வழக்கறிஞர்கள் அணி தரப்பில், "இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஏற்கனவே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க ஜூலை 10 அன்று ஆஜராகவிருந்த நிலையில் அவசர அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றும் வாதிட்டு உடனடி ஜாமீன் கோரினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்ற நடுவர், நள்ளிரவில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலிஸ் காவலில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். நள்ளிரவிலும் ஜாமீன் கிடைத்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்ட சம்பவம் தென் மாவட்ட திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.