அன்னா ஹசாரே வரலாறு - சாதனைகளும் சோதனைகளும்!
இந்தியாவின் ஊழலுக்கு எதிரான இயக்கங்களிலும் கிராமப்புற வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் (கிசான் பாபுராவ் ஹசாரே) வாழ்க்கை கொள்கைப்பிடிப்போது மக்கள் பணியாற்ற வருகின்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.
அன்னா ஹசாரே ஜூன் 15, 1937 அன்று மகாராஷ்டிராவில் பிறந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, முழுமையாகச் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமமான 'ராலேகன் சித்தி' கிராமத்தை, மழைநீர் சேகரிப்பு, கடுமையான மதுவிலக்கு மற்றும் வலுவான கூட்டுறவு முறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் முன்மாதிரி கிராமமாக மாற்றி உலகப் புகழ்பெற்றார்.
நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஊழலுக்கு எதிரான 'லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி இவர் தொடர்ந்து பல்வேறு தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
குறிப்பாக, 2011-ம் ஆண்டு டெல்லியில் இவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.