தலைமைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை ... அண்ணாமலை பளிச்!
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய அண்ணாமலை, தான் வெளியேறுவதற்கான காரணங்கள் குறித்து கட்சியின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சாமானிய மக்களும் அரசியலுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கவே தான் உழைத்ததாகவும் கூறியுள்ளார்.
மாநில மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய நிலையில், தேசிய கட்சிகள் தமிழக மக்களின் மொழியில் பேசியதில்லை என்ற குறையை மாற்ற முயன்றதாகத் தெரிவித்துள்ளார். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பல தடைகள் வந்த போதும் அதில் ஓரளவுக்கு வெற்றியைக் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 18 மாதங்களாக கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்து தனது கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதை குறித்த தனது எண்ணங்களுடன் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று அண்ணாமலை விளக்கியுள்ளார். மூத்த தலைவர்களுடனான பேச்சுகளுக்குப் பிறகு கருத்துக்கள் ஒத்துப்போகவில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும், இதனால் நீண்ட யோசனைக்குப் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகுவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்