"தாயாரை இழிவுபடுத்துவது நாகரிகமல்ல" - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
முதலமைச்சர் விஜய்யின் தாயார் குறித்துத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகளுக்கு 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் தலைவரான கே. அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தை அறிக்கையின் மூலம் பதிவு செய்துள்ளார்.
திமுகவின் உதயநிதியைத் தொடர்ந்து, தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தின் எல்லையை மீறி முதலமைச்சர் விஜய்யின் தாயார் குறித்துப் பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் கொள்கைகளையும் அரசின் செயல்பாடுகளையும் கேள்வி கேட்க முழு உரிமையுண்டு; ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாகத் தாயாரை இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தரக்குறைவான பேச்சுகள் 30-40 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிப்போன மூன்றாந்தர அரசியல் கலாசாரம் என்றும், இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய அரசியல் இதுவல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாகப் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "அப்பா எங்கே? என அம்மாவிடம் போய் கேளுங்கள்" என்று முதலமைச்சர் விஜய்யைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
நயினாரின் இந்தப் பேச்சுக்குத் திமுக அமைச்சர் ராஜ்மோகன், தவெக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.