இன்று ஒரே நாளில் 7 தொகுதிகளில் அண்ணாமலை சூறாவளிப் பிரசாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று ஒரே நாளில் 7 தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இன்று காலை முதல் இரவு வரை அண்ணாமலை முதுகுளத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவெறும்பூர், திருச்சி மேற்கு ஆகிய 7 தொகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்துப் பேசுகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பதிவில், திமுக ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"ஊழல், நிர்வாகத் தோல்வி, விலைவாசி உயர்வு மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திமுக ஆட்சி உள்ளது" என்று சாடியுள்ள அவர், தமிழகத்தில் நிலவும் இருண்ட ஆட்சி அகன்று நல்லாட்சி மலர மக்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ள நிலையில், ராமநாதபுரம் மற்றும் திருச்சி போன்ற முக்கியமான தொகுதிகளில் அண்ணாமலையின் பிரசாரம் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் என பாஜகவினர் நம்புகின்றனர். குறிப்பாகத் திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதிகளில் நிலவும் கடும் போட்டியில் அண்ணாமலையின் வருகை முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், தேசியத் தலைவர்களின் வருகையும் அண்ணாமலை போன்ற மாநிலத் தலைவர்களின் தீவிரப் பயணமும் தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளன.