அண்ணாமலை மாஸ் எண்ட்ரி... இன்று பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு தொடங்குகிறது!
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தின் முதலாவது பிரம்மாண்ட மாநில மாநாடு இன்று மாலை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் உள்ள கொங்குசிட்டி மைதானத்தில் நடைபெறுகிறது.
பாஜகவில் இருந்து ஜூன் மாதம் விலகிய அண்ணாமலை, சாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு மாற்றாக, மக்கள் நலனை முன்னிறுத்திய தரவு சார்ந்த அரசியலை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கினார். தற்பொழுது வரை சுமார் 19 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ள நிலையில், இந்த முதல் மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராகப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மாநாட்டிற்கு "போதை இல்லா பொள்ளாச்சி" என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் அண்ணாமலை ஆற்றவுள்ள முக்கிய உரையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. குறிப்பாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அடுத்த 18 மாதங்களுக்குத் தீவிர அரசியல் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மக்கள் இயக்கமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பை விரைவில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் மற்றும் அடுத்தகட்டப் பொதுத்தேர்தல்களை இந்த புதிய இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்த அரசியல் வரைபடத்தை அண்ணாமலை வெளியிட வாய்ப்புள்ளது.
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழலில், தவெக உள்ளிட்ட புதிய கட்சிகளுக்குப் போட்டியாக அண்ணாமலையின் இந்த ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் களம் காண்பதால், இன்றைய மாநாடு அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.