undefined

திமுக அரசு ரூ.20யைக் கொடுத்துட்டு 150 ரூபாயைப் பறிக்கிறது - அண்ணாமலை ஆவேசம்!

 

சென்னையின் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியாக இருந்தும், இந்தத் தொகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கூட மேம்படுத்தப்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். "சென்னை தங்களின் கோட்டை, மக்கள் தங்களை விட்டு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற இறுமாப்பில் திமுக உள்ளது. ஆனால், வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் 8 சதவீதம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 2023-ம் ஆண்டுக்குப் பிறகு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு தரவுகளை அனுப்ப திமுக அரசு மறுத்து வருவதாகவும், உண்மையான குற்றப் புள்ளிவிவரங்கள் தெரிந்தால் மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்பதால் அரசு மறைப்பதாகவும் அவர் சாடினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் கூகுள் மற்றும் டேட்டா சென்டர்களைத் தன் மாநிலத்திற்குக் கொண்டு வருவது பற்றிப் பேசுகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மகனோ எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மட்டுமே பேசி வருகிறார் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

2021-ல் 4.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் மொத்த கடன், தற்போது 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மூலம் ஒரு பெண்ணிற்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 20 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. ஆனால், மாநிலத்தின் மொத்த கடனைக் கணக்கிட்டால் ஒரு குடும்ப அட்டைக்கு 4.82 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதாவது, அரசு ஒரு கையில் 20 ரூபாயைக் கொடுத்துவிட்டு, மற்றொரு கையில் கடனாக 150 ரூபாயைப் பறிக்கிறது. இந்த ஏமாற்று வேலையைப் பெண்கள் மன்னிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை மற்றும் நிர்வாகத் திறமை குறித்து அண்ணாமலை முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.