"ஓராண்டு அவகாசம் தேவை" - முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு!

 

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசியல் களம் பல்வேறு உள்கட்சி விவாதங்களால் பரபரப்பாக இருக்கும் வேளையில், அண்ணாமலையின் இந்த வெளிநாட்டு உரை புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த மேடையில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய ஆட்சி மாற்றம் குறித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. எந்தவொரு புதிய அரசும் தங்களது கொள்கைகளைச் செயல்படுத்தவும், நிர்வாக ரீதியாகத் தங்களை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்ளவும் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது தேவைப்படும்.

எனவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசுக்குத் தமிழக மக்கள் ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள் தவெக அரசின் செயல்பாடுகளை அவசரமாக மதிப்பிடக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது:

தமிழகத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-விடம் நடத்தப்பட்ட குதிரைப்பேரப் புகார்கள் எனப் பல்வேறு அதிரடிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில், வெளிநாட்டு மண்ணில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவாக அண்ணாமலை திடீரெனக் குரல் கொடுத்திருப்பது, பாஜக - தவெக இடையேயான எதிர்கால அரசியல் நகர்வுகளின் அறிகுறியா என்ற கோணத்தில் அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.