அண்ணாமலை தலைமையில் ஜூலை 12-ல் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு!
இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் பரப்பவும் 'WE THE LEADERS' அமைப்பின் சார்பில் பிரம்மாண்டமான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
'WE THE LEADERS' அமைப்பின் தலைவரான அண்ணாமலை தலைமையில், நடப்பு ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தொடரின் முதலாவது போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு வருகிற ஜூலை 12ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதனுடைய இரண்டாவது மாநாடு வருகிற ஜூலை 26ஆம் தேதி திருச்செந்தூரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளந்தலைமுறையினரைச் சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராகச் சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருந்தும் ஆதரவைத் திரட்டுவதே இந்த மாநாடுகளின் முக்கிய நோக்கமாகும். இதன்காரணமாக, பொள்ளாச்சி மற்றும் திருச்செந்தூரில் நடைபெறவிருக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.