"மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை” - கனிமொழி ஆவேசம்!

 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமி சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான தவெக அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்குச் சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இக்கொடூரம் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி, ஆளுங்கட்சியான தவெக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.  பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு அரசியல் லாபமே முக்கியமாகப் படுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். "ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவில் உள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் தான் தவெக அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது" என்று கனிமொழி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் சமீபத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கனிமொழி எம்பி அதனைச் சுட்டிக்காட்டி தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைச் சாடியிருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.