போலீஸ் அலட்சியத்தால் பலியான இன்னொரு உயிர்... உள்ளங்கையில் உருக்கமாக எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை!
திருநெல்வேலி அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துயரத்தைத் தாங்க முடியாமல், அவரது மகள் தனது உள்ளங்கையில் உருக்கமான மரண வாக்குமூலத்தை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மார்ச் 17-ம் தேதி மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், அவரது மகள் பேபி கனி (23) தற்போது விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தனது தந்தை கொல்லப்பட்டு 5 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததாலும், தந்தையின் பிரிவைத் தாங்க முடியாமலும் பேபி கனி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், பேபி கனி தற்கொலைக்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், தனது உள்ளங்கையிலும் மை பேனாவால் சில முக்கியத் தகவல்களை எழுதியுள்ளார்: "தந்தை இறந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. எனது தந்தை கொலை செய்யப்பட எனது உறவினர் ஒருவரே காரணம். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை (குற்றவாளிகளைக் கைது செய்வதை) நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று தனது உள்ளங்கையில் எழுதி வைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆறுமுகம் மற்றும் பேபி கனியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை மற்றும் மகள் இருவரின் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது. பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே தூத்துக்குடி வேடநந்தம் கிராமத்தில், 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், புகாரளிக்க சென்ற பெற்றோரிடத்தில் புகார் வாங்காமல், அலைகழித்த போலீசார், அந்த சம்பவம் பரபரப்பாகி ஊர் மக்கள் போராட்டம் நடத்தியதும் கொலையாளியை பத்து நாட்களுக்குப் பின்னர் கைது செய்தனர். அது போல், தனது தந்தை கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்களாகியும் விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் போலீசார் மெத்தனமாக இருப்பதாக மன அழுத்தத்தில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டது ஊர் மக்களை கொந்தளிக்க செய்துள்ளது.