இன்று முதல் பிளஸ்-2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்!
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் நகல் கோரி 67 ஆயிரத்து 812 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு 51 ஆயிரத்து 720 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விடைத்தாள் நகலுக்காக விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் ஜூன் 16-ந்தேதி வரை பாடவாரியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து விடைத்தாள் நகல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான படிவத்தையும் அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு செய்ய ஒரு பாடத்துக்கு ரூ.505 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க உயிரியல் பாடத்துக்கு ரூ.305 கட்டணமும், பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணமும் செலுத்தவேண்டும். மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி குறித்த தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.