தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை - அரசு அலுவலகங்களில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்; அதிகாரிகள் உட்பட பலர் கைது!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்ச புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூபாய் 22.33 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத ரூபாய் 12.46 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இதேபோல், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 9.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த ஒரு வாரச் சோதனையில் ரூபாய் 22.33 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசுச் சேவைகளைப் பெற பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பொறிவைத்து கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் கட்டட வரைபட அனுமதி வழங்குவதற்காக ரூபாய் 15,000 லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் பாலமுருகன் ஜூலை 7 அன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூரில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காகப் பொதுமக்களிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் அதே நாளில் பிடிபட்டார். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தின் உரிமத்தைத் திருப்பித் தருவதற்கு ரூபாய் 1,000 லஞ்சம் வாங்கிய காவலர் அழகுராஜா ஜூலை 9 அன்று கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையில் ஒரு தம்பதியினருக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக ரூபாய் 3,000 லஞ்சம் பெற்ற திருப்புவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார். அதே நாளில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூபாய் 3,000 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூபாய் 2,500 லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன் ஜூலை 10 அன்று கைது செய்யப்பட்டார். தென்காசியில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் சங்கர் என்பவர் அதே நாளில் கைகாரமாகப் பிடிபட்டார்.
ஊழல் வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்புடைய தாசில்தார் ஆதிபகவான் மற்றும் அவரது ஓட்டுநர் கந்தசாமி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூபாய் 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது நியாயமான அரசுச் சேவைகளைப் பெற லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.