தமிழக பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்கள்... ரூ.7 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!

 

மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கத் தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் பள்ளிகளிலிருந்தே விழிப்புணர்வு தொடங்கப்பட வேண்டும் என வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்த 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் தகவல் தெரிவிக்க ஏதுவாக 'போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற செயலி மூலமும் தகவல்களைப் பகிரும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.