இந்தி எதிர்ப்புப் போராட்டம்.. ரயில் முன் பாய்ந்த மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபன் உயிரிழப்பு!

 

மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்துச் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த மே 17 இயக்கத்தின் மூத்த உறுப்பினர் சிவக்குமார் என்கிற சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவக்குமார், ரயில் நிலையத்தில் இருந்த இந்திப் பெயர்ப் பலகைகளில் உள்ள எழுத்துகளை அழித்து, துண்டறிக்கைகளை விநியோகித்து முழக்கமிட்டார்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்று முழக்கமிட்டவாறே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த புறநகர் ரயில் முன் சிவக்குமார் திடீரெனப் பாய்ந்தார். இதில் அவர் உடல் நசுங்கிப் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு மே 17 இயக்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.