திமுகவிலிருந்து விலகி அன்வர் ராஜா தவெகவில் இணைய திட்டம் - வக்ஃபு வாரியத் தலைவர் பதவியைக் குறிவைத்து தூது!?
கடந்த ஆண்டு திமுகவில் இணைந்துஅக்கட்சியின் இலக்கிய அணித் தலைவராகச் செயல்பட்டு வரும் முன்னாள் அதிமுக எம்பியும், மூத்த சிறுபான்மையினர் முகமுமான அன்வர் ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தில்இணைவதற்குத் தூது விட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பான புதிய தகவல் கசிந்துள்ளது. தனியார் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள இந்தச் செய்தி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த 2025 ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து விலகிய அன்வர் ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்குத் திமுகவின் இலக்கிய அணித் தலைவர் என்ற மிக முக்கியப் பொறுப்பும் துரைமுருகனால் வழங்கப்பட்டது.
ஆயினும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில், தவெகவின் வளர்ச்சி மற்றும் அதன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைக் கவனித்து வரும் அன்வர் ராஜா, திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைவதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளை ரகசியமாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்வர் ராஜா தவெகவில் இணைவதற்குத் தூது அனுப்பி வருவது ஒருபுறமிருக்க, அவர் தவெக தலைமைக்கு ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், தனக்குத் 'தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர்'பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது பிரதான நிபந்தனையாக உள்ளதாம்.
அன்வர் ராஜா ஏற்கனவே கடந்த 2018-19 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வக்ஃபு வாரியத் தலைவராகப் பதவி வகித்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், சீனியர் அரசியல்வாதியான அன்வர் ராஜாவின் இந்த நிபந்தனைக்கு தவெக தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பச்சைக் கொடி காட்டவில்லை எனத் தெரிகிறது. கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளில் தவெக தலைவர் விஜய் நிதானமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், இந்தத் தூது விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் மூத்த சிறுபான்மையினத் தலைவர் ஒருவரின் இந்த அடுத்தகட்ட அரசியல் நகர்வு, திமுக மற்றும் தவெக ஆகிய இருதரப்பிலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.