காலையிலேயே பதற்றம்... கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்; தமிழக எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தம்!
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை முன்வைத்து கர்நாடகாவில் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் ஜூஜூவாடி எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கும் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளிலும் பயணிகள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி வழியாகக் கர்நாடகாவிற்கு இயக்கப்படும் 14 தமிழக அரசுப் பேருந்துகளின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாகக் கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலிஸார் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.