உலக அளவில் சாதனை... App பதிவிறக்கத்தில் இந்தியா முதலிடம்!

 

உலக அளவில் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு சாதனை படைத்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலிகளைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செயலிகளின் பதிவிறக்கம் சுமார் 207 சதவீதம் அதிகரித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக அளவில் பதிவிறக்கம் செய்யப்படும் மொத்த ஏஐ செயலிகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து மட்டுமே செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பதிவிறக்கங்கள் உச்சத்தை தொட்டு 320 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கூகுள், மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையைக் குறிவைத்து வழங்கி வரும் பல்வேறு சலுகைகளும் இந்த அதீத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த செயலிகளே இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளன. இணைய வசதி கிராமப்புறங்களிலும் பரவி வருவதால் இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்வது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது.