தமிழகத்தில் ஏப்ரல் 23 பொது விடுமுறை... 4 நாள் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு?!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றும் வகையில், அன்று ஒருநாள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 23ம் தேதி விடுமுறை பொருந்தும். தேர்தல் வியாழக்கிழமை வருவதால், சென்னையில் இருந்தும் மற்ற நகரங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்துத் துறை சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 (வியாழன்): தேர்தல் விடுமுறை, ஏப்ரல் 24 (வெள்ளி): வேலை நாள் (பலர் ஒருநாள் விடுப்பு எடுக்க வாய்ப்பு). ஏப்ரல் 25, 26 (சனி, ஞாயிறு): வார இறுதி விடுமுறை. இதனால், வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுப்பவர்களுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால், வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.