ஏப்ரல் 23: தமிழகத்தில் முழு ஊதியத்துடன் பொது விடுமுறை - அரசாணை வெளியீடு!

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்றைய தினத்தை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவித்துத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135B-இன் கீழ், தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் இந்தப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்துத் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 23 வியாழக்கிழமை விடுமுறை என்பதால், அடுத்த நாளான ஏப்ரல் 24 (வெள்ளிக்கிழமை) ஒருநாள் விடுப்பு எடுப்பவர்களுக்கு, ஏப்ரல் 25, 26 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்களுடன் சேர்த்துத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, நெல்லை எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சொந்த ஊர் சென்று வாக்களிக்கத் திட்டமிடும் மக்களின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தேர்தல் ஆணையம் இந்த விடுமுறையை அறிவிப்பதன் மூலம், வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் தங்களது சொந்தத் தொகுதிகளுக்குச் சென்று எவ்விதப் பணி நெருக்கடியும் இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய விரும்புகிறது. 'எனது வாக்கு, எனது உரிமை' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வுப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.