'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் 'கோல்டன் பிளேட்' விருது!

 

ஆஸ்கார் நாயகன் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மகுடத்தில் மற்றுமொரு சர்வதேச வைரம் இணைந்துள்ளது. அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'கோல்டன் பிளேட்' விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இருந்து வந்துள்ள இந்த கலைத்துறைச் சாதனைச் செய்தி இந்திய இசை ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புகழ்பெற்ற மெல்லன் ஆடிட்டோரியத்தில், 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்'  அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த உயரிய விருது பிரகடனம் செய்யப்பட்டது.

உலகத் திரைப்பட வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படங்களின் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் பீட்டர் ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த 'கோல்டன் பிளேட்' விருதை மேடையில் நேரில் வழங்கிச் சிறப்பித்தார்.

'கோல்டன் பிளேட் விருது' என்பது கலை, அறிவியல், இலக்கியம், பொதுச் சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உலகளாவிய ரீதியில் மிக நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தங்களின் உழைப்பால் உத்வேகமாகத் திகழும் ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக அரிய கௌரவமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருதைப் பெற்றதன் மூலம், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹருகி முரகாமி, ஹாலிவுட் நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், சர்வதேசப் பிரபல இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சாமுவேல் எல்.ஜாக்சன் போன்ற உலகளாவிய மாமேதைகள் வரிசையில் தற்பொழுது ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்துள்ளார்.