பாடகி சுஜாதாவிற்குத் தொண்டை பாதிப்பு - ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ரிஹானா உருக்கமான வேண்டுகோள்!

 

தென்னிந்தியத் திரையுலகின் 'தேன் குரல்' என்று அழைக்கப்படும் பிரபலப் பாடகி சுஜாதா மோகன், தனது குரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதன்முறையாகத் மனம் திறந்துள்ள தகவல் இசை ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்களைப் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த பாடகி சுஜாதா மோகன், கடந்த 5 ஆண்டுகளாக நேரடி மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதைத் தவிர்த்து வந்தார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஜாதா, தனது குரல் வளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துப் பகிர்ந்துள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளாகத் தனது தொண்டையில் ஏற்பட்டுள்ள ஒருவித உடல்நலக் கோளாறு காரணமாக, முன்பைப் போலச் சரளமாகப் பாட முடிவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குரல் மாற்றத்தின் காரணமாகவே, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது என்பதற்காகப் பல மேடை வாய்ப்புகளை அவர் மறுத்து வந்துள்ளார். இந்தத் தகவல் இசை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுஜாதாவின் இந்தப் பாதிப்பு குறித்துக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், பாடகியுமான ஏ.ஆர்.ரிஹானா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சுஜாதாவின் குரல் என்பது கடவுள் கொடுத்த வரம். அந்தத் தேன் குரல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சிறந்த மருத்துவர்கள் யாராவது இருந்தால், அவருக்கு உதவ முன்வர வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்," என அவர் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'புது வெள்ளை மழை', 'மின்சாரப் பூவே' எனப் பல காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய சுஜாதா, விரைவில் குணமடைய வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் சுஜாதாவிற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.