இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறதா கம்யூனிஸ்ட்கள்!? பின்னணி என்ன?!

 

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளில் உள்ள சில முரண்பாடுகள் குறித்து இடதுசாரிக் கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இருப்பினும், அவ்வாறு விமர்சிக்கும் போதெல்லாம் தங்களை 'திமுகவின் கைக்கூலிகள்' போலச் சித்தரிப்பதும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முயலும் போது ஆட்சிக்கு ஆதரவாக மட்டுமே பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதும் இடதுசாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தோழமை இயக்கங்களின் பிரதிநிதிகள் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைகள் குறித்துப் பேச முற்படும் போது முறையான அனுமதியோ அல்லது சந்திப்புக்கான வாய்ப்போ மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசின் இந்தப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் இடதுசாரிக் கட்சிகள் தற்போது பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் களம் முடிந்தவுடன் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.