"என்னை ஜெயிலில் வெச்சுடுவியா? உன் ஆட்சி எண்ணப்படுகிறது" - மீண்டும் முதல்வரை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்!

 

திமுக எம்பி ஆ.ராசாவைத் தொடர்ந்து, தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனும் தமிழக முதலமைச்சர் விஜய்யை மீண்டும் ஒருமையில் விமர்சித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் தோல்வி குறித்தும் தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்தும் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். பல வியூகங்களை வகுத்து நமது தலைவரைத் தோற்கடித்துள்ளார்கள். ஐந்து நிமிடங்கள் சட்டமன்றத்தில் பேசினேன், கொத்து பரோட்டா ஆக்கிவிட்டேன் என ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவர் கூறி வருகிறார்.

மாலை 6 மணிக்குத் தூங்கச் சென்றால் அடுத்த நாள் காலை 10 மணிக்குத் தான் எழுந்திருப்பார். அவனுக்குத் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் யார் இருக்கிறார், யார் இல்லை என்பதே அவருக்குத் தெரியாது.

முதலமைச்சர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நிஜத்திலும் நடிக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால், இந்த வேஷமெல்லாம் இங்கு எடுபடாது. தொடர்ந்து பேசிய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் திமுக தான் மாபெரும் வெற்றி பெறும் எனச் சவால் விடுத்தார். தமிழ்நாட்டின் எந்த இடத்திலாவது தவெக ஜெயித்துக் காட்டட்டும், பார்க்கலாம் எனப் சவால் விடுத்த அவர், இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர்தான் வெற்றி பெறுவார் என்ற புதிய வரலாற்றை உருவாக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக மேடையில் பேசியதற்காகத் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ஆளுங்கட்சியின் மிரட்டல்களுக்குத் திமுக என்றும் அஞ்சாது எனக் கர்ஜித்தார். "நம்முடைய தலைவருக்கோ, இளந்தலைவருக்கோ (உதயநிதி), கனிமொழி எம்பிக்கோ இணையாகப் பணியாற்ற இந்தத் தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கமாவது இருக்கிறதா? அப்பேற்பட்ட வலிமையான இயக்கம் திமுக. மேடையில் நான் பேசியதற்காக என்னை அண்மையில் பிடித்தார்கள். என்னை ஜெயிலில் வைத்து விடுவியா? 1 மாதம் அல்ல, 5 வருடங்கள் ஜெயிலில் அடைத்தாலும் யாராலும் இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்க முடியாது. உன்னுடைய ஆட்சியின் நாட்கள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது!"

திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்து முதலமைச்சர் விஜய்யை மேடைகளில் மிகக் கடுமையான வார்த்தைகளால் ஏளனம் செய்தும், ஒருமையில் விமர்சித்தும் பேசி வருவது தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே தற்பொழுது வார்த்தைப் போராக வெடித்துள்ளது.