தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சென்னையில் 5 இடங்களில் சிறப்புப் பேருந்துகள்; எந்தெந்த ஊர்களுக்கு எங்கு செல்ல வேண்டும்? முழு விவரம்

 

வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நகரில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றிப் பேருந்துகளில் ஏறவும் மண்டல வாரியாகப் பேருந்து முனையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்தே புறப்படும். திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர்.

தென் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு திண்டிவனம் வழியாகப் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கடலூர். மேலும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயங்கும்.

செஞ்சி மார்க்கமாகத் திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் CMDA காலநிலை பூங்காவிற்கு அருகில் உள்ள திறந்த வெளி தற்காலிகப் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டப் பகுதிகளான கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பேராவூரணி, திருவாரூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள். காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே வழக்கம்போலச் செயல்படும்.

பொன்னேரி, ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் (ஆந்திர மாநிலம்) செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கும். இதனுடன் வழக்கமாக மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் இங்கு இருந்தே புறப்படும்.

பயணிகள் தங்கள் ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும் சரியான இடங்களை அறிந்து, முன்னதாகவே திட்டமிட்டுப் பயணிக்க அரசுப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.