“எல்லா தப்பையும் நீங்க செஞ்சுட்டு, என் மேல பழி போடுறீங்களா?" திமுகவுக்கு விஜய் பதிலடி!

 

திருச்சி புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தவெக-வின் பிரம்மாண்ட நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், "தி.மு.க-வினரால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியாமல் கல்யாண வீட்டிலும் புலம்புகிறார்கள்" என்று முதலமைச்சர் விஜய் பேசிய அதிரடி கிளம்பியிருக்கிறார். 

"இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று திமுகவினர் மேடைக்கு மேடை கூச்சலிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தற்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்குக் காரணமே, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவர்கள் தொடங்கி வைத்துவிட்டுச் சென்ற போதைப்பொருள் கலாச்சாரம் தான். போதைப்பொருளைக் கட்டுப்படுத்தத் தவறியது நீங்கள் தான்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

"மாநிலத்தில் உள்ள அத்தனை தவறுகளையும், போதைப்பொருள் நெட்வொர்க்குகளையும் நீங்களே உருவாக்கி வளர்த்துவிட்டு, இன்று ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து சில நாட்களேயான என் மீது அப்பட்டமாகப் பழி போடுகிறீர்கள். உங்கள் பழிச்சொற்களுக்கு நான் அஞ்சமாட்டேன்" என்று முதல்வர் விஜய் ஆவேசமாகப் பேசினார்.

எதிர்க்கட்சிகளின் போலிப் பிரச்சாரங்களைத் முறியடித்து, தமிழக மக்களின் பாதுகாப்பைத் தனது அரசு எப்படி உறுதி செய்யப் போகிறது என்பதையும் முதல்வர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.

"யார் என் மீது எவ்வளவு பழி போட்டாலும், இந்தத் தமிழக மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான அத்தனை மக்கள் நலச் செயல்களையும் இந்த தவெக அரசு துணிச்சலுடன் செய்யும். இதற்காக மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும் மிகத் 'திறமையான காவல் துறை அதிகாரிகள் அடங்கிய புதிய போலீஸ் அணியை' நான் உருவாக்கியுள்ளேன். அவர்கள் மூலம் குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்தார்.