"உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஜெயிச்சா அரசியலை விட்டு விலக தயாரா?" - ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சவால்!
"வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அனைத்து மேயர் இடங்களையும் வென்று காட்டும்; அப்படி நாங்கள் வெற்றி பெற்றால், தவெக மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அரசியலை விட்டு விலகத் தயாரா?" என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பகீரங்கமாக சவால் விடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் தீயாய் பரவி வருகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், 'திமுகவினருக்கு தில், தைரியமிருந்தால் 25 மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது வென்று காட்டுங்கள்' என மிகவும் ஆணவமாகப் பேசியுள்ளார்.
எங்கள் கட்சிக்கும், எங்களது இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சவால் விடுத்து அவர் பேசியுள்ளார். கட்சியில் திடீரென ஒரு பொறுப்புக்கு வந்துள்ள ஆதவ் அர்ஜுனா, கண்ணியத்தை மறந்து 'தில், தைரியம்' என்றெல்லாம் பேசுவது அநாகரிகமானது."
தனது அறிக்கையில், தவெக-வின் சவாலைத் தவிடுபொடியாக்கும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணன், "நாங்கள் தமிழக மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்து உறுதியாகச் சொல்கிறோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஏதோ ஒரு மேயர் பொறுப்பு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து 25 மாநகராட்சி மேயர் பதவிகளையும், உள்ளாட்சி மன்றப் பொறுப்புகளையும் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பிரம்மாண்டமாக வென்று காட்டும். நாங்கள் அப்படி வென்று காட்டினால், சவால் விட்ட நீங்கள் அரசியலை விட்டு நிரந்தரமாக விலகிவிடுவீர்களா? என நான் பகிரங்கமாகக் கேள்வி எழுப்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, "தவெக ஒரு மேயர் இடத்தை வென்றாலும் நான் ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து, தற்பொழுது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் நேரடியாக ஆதவ் அர்ஜுனாவுக்கு 'அரசியல் துறப்பு' சவால் விடுத்துள்ளது, திமுக - தவெக இடையேயான அரசியல் யுத்தத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.