"என்னை முதல்வராக்க முயற்ச்சியா? தலித் முதல்வர் கனவு நூறாண்டானாலும் நனவாகாது" - திருமாவளவன் உருக்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தன்னை முதலமைச்சராக்க முயற்சி நடந்ததாக வெளியான செய்திகள் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். "தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்குத் தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை" என்று அவர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வெளிப்படையான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் தலித்துகள் முதலமைச்சர்களாக இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் இது இன்னும் நூறாண்டானாலும் கனவாகவே இருக்கும் என்பதைத் தான் அறிவதாகவும் கூறியுள்ளார். ஒரு கருத்தைப் பிறிதொரு பொருள்படும்படி தலைப்பிட்டுச் செய்திகளைப் பரப்புவது ஊடக அறமல்ல என்று அவர் சாடியுள்ளார். திருமாவளவனின் இந்த எதார்த்தமான பதிவு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகளைப் பெற்று வருகிறது.