"விஜய் மாமான்னு கூப்பிட்ட குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லையா?" - மதுரை சிறுவன் மரணத்தில் கனிமொழி ஆவேசம்!

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடி திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரை மேலூர் அருகேயுள்ள தனியார் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திடீரென மாயமான நிலையில், வீட்டின் அருகே உள்ள பாழடைந்த ஓட்டு வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதால், அவன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதிவில், "தேர்தலின் போது உங்களை 'விஜய் மாமா' என்று அன்போடு அழைத்து, உங்களுக்காக ஓட்டுக் கேட்ட மழலைச் செல்வங்களுக்குக் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. உங்களால் சட்டம்-ஒழுங்கையும் காவல்துறையையும் கவனிக்க முடியவில்லை என்றால், அதை வேறு யாரிடமாவது கொடுத்து விடுங்கள். மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" என முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் குறிப்பிட்டுத் தனது கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.