undefined

“ஆட்சியில் பங்கு என சொல்லியும் விஜய்யுடன் சேர யாரும் முன்வரலை” - அர்ஜுன் சம்பத்

 

தஞ்சாவூரில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தஞ்சாவூர், ஒரத்தநாடு உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

"ஆட்சியில் பங்கு தருவதாக வெளிப்படையாக அறிவித்த போதிலும், ஒரு கட்சி கூட விஜய்யுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை" என்று அர்ஜுன் சம்பத் சுட்டிக்காட்டினார். நடிகர் விஜய் ஒரு திரைக் கலைஞராக வெற்றி பெற்றிருக்கலாமே தவிர, அரசியல் தலைவராக இன்னும் வெற்றி பெறவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் தேர்தலில் விஜய் உட்படத் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். விஜய்யை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார். நீதிமன்ற உத்தரவு இருந்தும் அங்குத் தீபம் ஏற்ற முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகம் வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்த பிறகு அங்குத் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்து மக்கள் கட்சி வரவிருக்கும் தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னிறுத்திச் செயல்படும் என்றும், திமுகவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.