சூடானுக்கு ரூ.580 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை... பெண் தொழிலதிபர் கைது!
அமெரிக்காவில் வசித்து வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், சர்வதேச அளவில் சட்டவிரோதமாக ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானின் உளவு அமைப்புகளுடன் இணைந்து, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டிற்கு சுமார் 580 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த ஷமிம் மாபி (44) என்ற இந்தப் பெண்மணி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் குடியேறி வசித்து வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவே அறியப்பட்டார். ஆனால், இவரது இந்த பகட்டான வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு சர்வதேச ஆயுதக் கடத்தல் நெட்வொர்க் இயங்கி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஈரான் நாட்டின் அதிகாரப்பூர்வ உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருடன் (IRGC) ஷமிம் மாபி நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க உளவு அமைப்புகள் நடத்திய ரகசிய விசாரணையில், ஷமிம் மாபி ஓமன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ‘அட்லஸ் இன்டர்நேஷனல் பிசினஸ்’ என்ற போலி நிறுவனத்தைப் பதிவு செய்து இயக்கி வந்தது தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் மூலமாகவே ஈரானிய ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யும் இடைத்தரகராக அவர் செயல்பட்டுள்ளார்.
சுமார் 70 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 580 கோடி ரூபாய்) மதிப்பிலான போர் தளவாடங்களைச் சூடான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்க அவர் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் மொஹாஜர்-6 (Mohajer-6): ஈரானிய தயாரிப்பான அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள் (ட்ரோன்கள்). வெடிகுண்டு பியூஸ்கள்: சுமார் 55,000 எண்ணிக்கையிலான வெடிகுண்டு வெடிக்கப் பயன்படும் சாதனங்கள். பல லட்சம் எண்ணிக்கையிலான துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் சக்திவாய்ந்த குண்டுகள் ஆகியவை அடங்கியிருந்தன.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்திற்கும், துணை ராணுவப் படைகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சூடானுக்கு ஆயுதங்களை வழங்கத் தடை விதித்துள்ளன.
இந்தத் தடையை மீறி, ஈரானிய தயாரிப்புகளைத் தனது போலி நிறுவனம் மூலம் சூடானுக்குக் கடத்த முயன்றது ஷமிம் மாபி மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டாகும். அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் திட்டமிட்டு மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கை, சர்வதேச ஆயுதக் கடத்தல் சந்தையில் ஈரானின் தலையீட்டை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஷமிம் மாபி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.