“கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை உடனடியாகக் கைது பண்ணுங்க...”  - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது மைனாரிட்டி அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே இந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றதாகவும், அதனாலேயே புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் தற்போது முறையாகப் புகார் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அரசு தொடக்கத்திலிருந்தே மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக நின்று உரிய சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆளுங்கட்சி எம்எல்ஏ தரப்பிலிருந்து இத்தகைய அத்துமீறல் ஏற்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ள அவர், மைனாரிட்டி அரசை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் இருப்பதால், இந்த விவகாரத்தை வெளியில் விடாமல் மறைக்க முயன்றதே தாமதத்திற்குக் காரணம் எனச் சாடியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது ஆளுங்கட்சிப் பிரதிநிதிகளோ எத்தகைய தவறு செய்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், இனியும் எவ்விதக் காலதாமதமும் இன்றி கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், உண்மை நிலையை விளக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ள தகவல் வெளியானது. இதற்கு முன்னதாக, இந்தச் சர்ச்சை தொடர்பாக 7 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்குத் தேசிய மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த வலியுறுத்தல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.