விமான ஜன்னலில் விநாயகர் ஓவியம் சர்ச்சை - ஓவியர் மிதாலி சலுங்கே விளக்கம்!
விமானப் பயணத்தின்போது ஜன்னல் கண்ணாடியில் விநாயகர் உருவத்தை வரைவது போன்ற வீடியோவை வெளியிட்டுச் சர்ச்சையில் சிக்கிய ஓவியர் மிதாலி சலுங்கே, அதுகுறித்த உண்மையான விளக்கத்தை அளித்துள்ளார்.
விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, விமானத்தின் ஜன்னலில் விநாயகர் உருவத்தை ஓவியமாக வரைவது போன்ற வீடியோ ஒன்றை ஓவியர் மிதாலி சலுங்கே சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பரவியதை அடுத்து, விமானத்தின் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாகவும், பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாகவும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதற்கிடையே, தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிதாலி சலுங்கே விளக்கம் அளித்தார். தான் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் நேரடியாக எதையும் வரையவில்லை என்றும், ஜன்னலுக்கு முன் வைக்கப்பட்டிருந்த ஒளிபுகும் தாளில் மட்டுமே அந்த ஓவியத்தை வரைந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், தான் வெளிப்படையான தாளில் வரைந்ததைக் காட்டும் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விமானத்திற்கு எந்தவிதச் சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்பது உறுதியானதை அடுத்து, இணையத்தில் எழுந்துவந்த இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.