லஞ்சப் பணத்தில் ₹24 கோடிக்குத் தங்கம் வாங்கிய அருண் IPS - ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!
கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வீரமணி மீதான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, அவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் ₹147.87 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறியுள்ளன. வழக்கை முடிப்பதற்காகப் பெறப்பட்ட லஞ்சப் பணத்தில், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து ₹24 கோடிக்கு ஐ.பி.எஸ். அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் பணம் பிரகாஷ் கண்ணையா என்பவர் மூலமாக கைமாறியுள்ளதாகவும், இந்த விசாரணை தொடங்கப்பட்டதும் அவர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடித் தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சப் பணத்தை மறைப்பதற்காகவே இந்தத் தங்கம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நகைக்கடை ரசீதுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மீது நீதிமன்றத்தில் இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பது காவல் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.