"அமைச்சர்கள் ஜாலியா தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்காங்க" - லாக் அப்பில் பலியான அருணாச்சலத்தின் தாயார் கண்ணீர்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் விசாரணை கைதி அருணாச்சலத்தின் தாயார், தனது மகனை இழந்த ஆறாத் துயரிலும் வேதனையிலும் அரசு மற்றும் அமைச்சர்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயார் கதறி அழுதபடி, "காவல் துறை அடித்து என் மகனின் உயிர் போயிருக்கிறது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகும், தமிழக அமைச்சர்கள் எந்தக் கவலையுமன்றி ஜாலியாகத் தியேட்டரில் விசில் அடித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் கடுமையாகச் சாடினார்.

"இதே போன்ற ஒரு துயரச் சம்பவம் அவர்களின் சொந்தக் குடும்பத்தில் நடந்திருந்தால், அவர்களால் இப்படிச் சந்தோஷமாகப் படம் பார்க்க முடிந்திருக்குமா?" என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த அருணாச்சலத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.